இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

Z+ பாதுகாப்புடன் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து துவாரகை வரை சுமார் 141 கி.மீ. நடைபயணத்தை கடந்த மார்ச் 27ம் தேதி துவங்கினார்.

5 நாட்களைக் கடந்து அவரது நடைபயணம் 6வது நாளை எட்டியிருக்கும் நிலையில் இதுவரை 60 கி.மீ. பயணத்தை முடித்துள்ளார்.

பகலில் நடந்து சென்றால் சாலையில் கூட்டம் கூடிவிடும் என்பதால் இரவு நேரங்களில் மட்டும் நடைபயணம் மேற்கொண்டு வரும் அனந்த் அம்பானி தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு 10 முதல் 12 கி.மீ. வரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஏப்ரல் 8ம் தேதி துவாரகை செல்ல திட்டமிட்டுள்ள அனந்த் தனது 30வது பிறந்தநாளான ஏப்ரல் 10ம் தேதி தனது தாயார் நீடா அம்பானியுடன் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க உள்ளார்.

இந்த நடைபயணம் குறித்து பேசிய அனந்த் அம்பானி, “துவாரகை ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கிய பின்னரே எந்த ஒரு முக்கிய நிகழ்வையும் துவங்குவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், இந்த ஆண்டு தனது பிறந்தநாளன்று துவாரகையில் சாமி தரிசனம் செய்ய எண்ணியதாகவும்” கூறினார்.

மேலும், “இளைஞர்கள் சனாதனத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும், அனைத்து இளைஞர்களும் கடவுள் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருக்க வேண்டும், சனாதனத்தையும் நேசிக்க வேண்டும். ஸ்ரீஜி பாபாவின் ஆசீர்வாதங்களுடன் அனைவரும் முன்னேற வேண்டும் என்பதே இளைஞர்களுக்கான செய்தி. கடவுள் இருந்தால் கவலைப்பட வேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளார்.