விசாகபட்டினம்

ணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிய வாலிபரை ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது.

இணைய தளம் மூலம் திருமணம் நடப்பது தற்போது சகஜமான ஒன்றாகும். அதே நேரத்தில் இணைய தளம் மூலம் பல மோசடிகளும் நடைபெறுவதும் சகஜமாகி வருகிறது குறிப்பாக பண மோசடி, பெண்கள் கடத்தல் போன்றவை இந்த திருமண விளம்பர தளங்களில் அதிகம் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ”நான் அவனில்லை” என்னும் திரைப்படம் வந்தது. அதில் ஒரு இளைஞன் பல மொழிப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விடுவான். தற்போது ஒரு இளைஞன் அதைப் போலவே பல மொழிப் பெண்களை ஏமாற்றி உள்ளான். ஓவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு பெயர் சொன்ன அவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.

அவனது முதல் பலி சென்னையை சேர்ந்த மம்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் எண் என கூறப்படுகிறது. அவரிடம் இந்த இளைஞன் ஜவகர் பாலகுமார் என்னும் பெயரில் அறிமுகமாகி காதல் வலை வீசி உள்ளான். இவனிடம் மயங்கிய மம்தா தனது பெற்றோரையும் மீறி திருமணம் செய்துக் கொண்டுள்ளார். ஆனால் அவரை இந்த இளைஞன் ஒரு ஓட்டலிலேயே தங்க வைத்துள்ளான்.

இதை அந்த பெண் எதிர்த்து கேள்விகள் கேட்டதால் சில தினங்களிலேயே கணவன் அடிப்பதும் திட்டுவதும் அதிகரித்துள்ளது. பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வந்தால் வீடு பார்ப்பதாக கூறிய கணவனை நம்பி இவர் பணத்தை அளித்துள்ளார். அதற்குள் மம்தா கர்ப்பமாகவே அந்த கர்ப்பத்தை அவள் கணவன் கலைக்க சொல்லி உள்ளான்.

அதற்கு மறுத்த மம்தாவை விட்டு விட்டு அவன் தலைமறைவாகி விட்டான். மம்தாவால் தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடந்த 2017 ஆம் வருடம் அவர் தமிழக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த இளைஞன் இதே பாணியில் ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் திருமண இணைய தளம் மூலம் வெவ்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்டு பணத்துடன் ஓடி இருக்கிறான்.

சமீபத்தில் அனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் ஒரு ஆந்திரப் பெண்ணிடம் தாம் அவருடைய விவரங்களை ஒரு திருமண இணைய தளத்தில் கண்டதாகவும் தமக்கு பிடித்துள்ளதாகவும் ஜவகர் தெரிவித்துள்ளான். அனு திருமணத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் தனக்கு தொழிலில் அவசரத் தேவை, மருத்துவச் செலவு என பல பொய்களைக் கூறி ரூ. 18 லட்சம் வரை வாங்கி உள்ளான்.

இந்த பணம் கேட்பது தொடரவே சந்தேகம் கொண்ட அனு விசாகப்பட்டினம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். விசாரணையில் ஜவகர் ஏற்கனவே பல இடங்களில் திருமணம் செய்து பண மோசடி செய்து விட்டு தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. அதை ஒட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஜவகர் தற்போது விசாகப்ப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.