சென்னை
சென்னை பிராட்வேயில் ஏ டி எம் இல் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்,
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. எனவே சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் பலத்த காற்றின் காரணமாக மின்சார கம்பிகள் ஆங்காங்கே அறுந்து கிடப்பதால் மின்சாரம் பாயும் அபாயம் ஏற்பட்டு பொதுமக்கள் மழையின் போது வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை பிராட்வே அருகே உள்ள முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்.இல் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சாந்தன் என்பவர் பணம் எடுக்கச் சென்றபோது அவர் ஏ.டி.எம் நிலையத்தில் உள்ள இரும்பு படிக்கட்டு கம்பியைப் பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.
அப்போது அதிலிருந்து அவர் மீது மின்சாரம் தாக்கி சாந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.