குலசேகரம்

முதல்வர் மு க ஸ்டாலின் போஸ்டர் மீது ஒரு மூதாட்டி கல் வீசும் வீடியோவை பரப்பிய கன்னியாகுமரி மாவட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் சென்னையில் உள்ள ஒரு மேம்பால சுவரில் ஒட்டப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அடங்கிய சுவரொட்டி மீது மூதாட்டி ஒருவர் கல்வீசுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை ஆர்.கே.நகர் காவல்துறையினரிடம் அளிக்கபட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோவை எடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சென்னையில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் பணிபுரியும் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள அஞ்சுகண்டறை பகுதியை சேர்ந்த பிரதீஷ் என்பவர்தான் அந்த வீடியோவை எடுத்தது தெரியவந்தது.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவரை சென்னை ஆர்.கே.நகர் காவல்துறையினர் நேற்று காலையில் அஞ்சுகண்டறையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து கைது செய்து அவரை போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.