கொல்கத்தா: மத்திய அரசு என்ஆர்சி -ஐ மேற்குவங்கத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அப்படி அவர்கள் மீறி முயன்றால், தன்னை தாண்டித்தான் மக்களைத் தொட முடியும் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.

அஸ்ஸாம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட என்ஆர்சி, நாடெங்கிலும் கொண்டுவரப்படுமென்று மத்திய பாரதீய ஜனதா அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த நடைமுறையை மேற்கு வங்கத்தில் கொண்டுவர விடமாட்டேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, தன்னைத் தாண்டித்தான் மத்திய அரசு மக்களைத் தொட முடியும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “மேற்குவங்க மக்களே என்மீது நம்பிக்கையிருந்தால் நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். யாரும் இந்த மாநிலத்திலிருந்து வெளியேற தேவையிருக்காது. நீங்கள் இத்தனையாண்டுகள் இ‍ஙகே எப்படி வாழ்ந்தீர்களோ, அப்படித்தான் இனிமேலும் இ‍ங்கே வாழ்வீர்கள். அவர்கள் உங்களைத் தொட விரும்பினால், முதலில் இந்த மம்தா பானர்ஜியை தொட்டாக வேண்டும்” என்றுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்த மம்தா பானர்ஜி, அஸ்ஸாம் என்ஆர்சி குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.