டில்லி,

பாஜக ஆட்சியில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை என்று சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயாபச்சன் விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பாணர்ஜி தலைக்கு ரூ11 லட்சம் தருவேன் என்று பாஜகவைச் சேர்ந்த யோகேஷ் வர்ஷினி என்பவர் அறிவித்த விவகாரத்தை நாடாளுமன்ற மாநிலங்களவை யில் நேற்று எழுப்பிய ஜெயா பச்சன்,

மம்தா பாணர்ஜிக்கு எதிரான இந்தப் பேச்சு, நாட்டில் பெண்களின் பாதிப்பு குறித்த அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.

இதுதான் பெண்களின் பாதுகாப்பு குறித்த மத்திய அரசின் அக்கறையா என்றும் ஜெயபச்சன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக எம்பி, ரூபா கங்குலி, திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 17 குண்டர்களால் காவல்துறையினரின் கண்முன்னாலேயே தாம் தாக்கப்பட்டதற்கு மம்தா பாணர்ஜி பதிலளிப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கேவும் மம்தா பாணர்ஜிக்கு எதிரான அந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

அப்போது பாரதிய ஜனதாவின் முக்தர் அப்பாஸ் நக்வி, மம்தா பாணர்ஜிக்கு எதிரான அந்த பேச்சு கண்டனத்திற்கு உரியது என்றும், அந்த நபர் மீது மேற்கு வங்க மாநில அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார்.

அவரது பதிலில் சமாதானமடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீண்ட நேரம் அமளியில், அவையில் கூச்சலும், குழப்பமும் நீடித்தது.

மேற்கு வங்கத்தில் அனுமன் ஊர்வலம் ஒன்றை காவல்துறை தடுத்து நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த யோகேஷ் வர்ஷினி என்பவர், மமதா பாணர்ஜியின் தலையை கொண்டு வருவோருக்கு தாம் 11 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாக கூறி இருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.