சென்னை: முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதற்கான கடைசி நாள் மே 15ந்தேதி ஆகும். தகுதி உடைய நபா்கள்இணையதளத்தில் மே.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்பது தமிழக அரசு சமூதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் இளைஞர்களை கண்டறிந்து தருகின்ற விருதாகும். இதனை 2014 ஜூலை 30ந்தேதி அன்று மறைந்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதைத்தொடர்ந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டு இந்த விருதுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2024-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆக.15 ஆம் தேதி அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
இவ்விருது பெற 01.04.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2024 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2023-2024) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவருக்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
தகுதி உடைய நபா்கள்இணையதளத்தில் மே.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.