லக்னோ: தான் கலந்துகொள்ளும் அமைச்சரவைக் கூட்டங்கள் உள்ளிட்ட இதர அதிகாரப்பூர்வ கூட்டங்களில் மொபைல் ஃபோன்கள் பயன்படுத்த தடைவிதித்துள்ளார் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
“கூட்டம் நடைபெறும்போது அனைத்து அமைச்சர்களும் விவாதிக்கப்படும் விஷயங்களின் மீது கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் மொபைல் ஃபோன் அழைப்புகளால் கவனம் சிதறக்கூடாது. கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, சில அமைச்சர்கள் மொபைல் ஃபோன் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பது கவனிக்கப்பட்டுள்ளது” என்று முதலமைச்சரின் செயலக அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், எலக்ட்ரானிக் உபகரணங்கள் மூலமாக முக்கிய தகவல்கள் கசிவது மற்றும் உளவு பார்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியாகவும் இந்த தடை நடவடிக்கை குறிப்பிடப்படுகிறது.
முன்பு, கேபினெட் கூட்டங்கள் நடக்கும்போது தங்களின் மொபைல் ஃபோன்களை வைத்துக்கொள்ள அமைச்சர்கள் அனுமதிக்கப்பட்டாலும், அதை சைலண்ட் மோடில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால், தற்போது கூட்டங்களுக்கே அவற்றை கொண்டுவராமல், தனியாக கவுண்டரில் வைத்துவிட்டு வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.