மும்பை:சிவசேனாவை ஆதரிக்கும் விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டாக அறிவித்து இருக்கின்றன.
அதோ, இதோ என்று தினம் ஒரு அரசியல் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த மகாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக சாடியிருக்கிறது.


பிரதமர் மோடி தந்த அழுத்தத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியது.இந் நிலையில் சிவசேனாவை ஆதரிக்கும் விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டாக அறிவித்து இருக்கின்றன.
காங்கிரசின் அகமது படேல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறி இருக்கின்றனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:


ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் ஜனாதிபதி ஆட்சிக்கான உச்ச நீதிமன்ற வழிமுறைகளை இந்த அரசு மீறியிருக்கிறது.
ஆளுநரிடம் இருந்து ஆட்சியமைக்க வருமாறு காங்கிரசுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் விதமாக ஆளுநர் நடந்து கொண்டிருக்கிறார்.
எங்களுடன் சிவசேனா நவ.11ம் தேதி தான் முறையாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போது மகாராஷ்டிர நிலைமை குறித்து இரு கட்சி தலைவர்களும் விவாதித்தோம் என்றனர்.


கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சரத் பவார், முதலில் இது தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருக்கிறோம். நாங்களும், காங்கிரசும் ஒரே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
ஆகையால் குறைந்தபட்ச செயல்திட்டம் என்பதில் எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் 3வது கட்சியுடன் பேசும் போது, இது பற்றி நாங்களும் ஆலோசிக்க வேண்டி இருக்கிறது.
அதில் ஒரு தெளிவு கிடைத்துவிட்டால், அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு செல்வோம். ஆளுநர் போதிய அளவு கால அவகாசம் கொடுத்திருக்கிறார் என்று கூறினார்.