ஏனாம்
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாமில் ஓ என் ஜி சிக்கு எதிராக மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர்.
புதுச்சேரி மாநிலம், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் பரவி உள்ளது. இம்மாநிலத்தின் ஏனாம் பகுதி ஆந்திர எல்லையில் உள்ளது. இங்கு ஓ என் ஜி சி நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு தயாரிக்கும் எண்ணெய்க் கிணறு உள்ளது. இந்த நிறுவனம் மீனவர்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டு தொகையில் ஒரு பகுதி மட்டுமே அளித்துள்ளது. மீதம் தர வேண்டிய பணத்தை தராமல் இழுக்கடித்து வருகிறது.
இதை எதிர்த்து ஏனாம் பகுதி மீனவர்கள் நூற்றுக் கணக்கானோர் ஆற்றில் மீன்பிடி படகுகளுடன் போராட்டம் நடத்தி உள்ளனர். ஓ என் ஜி சி நிறுவனம் அப்போது ஏனாம் பகுதி மீனவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை 13.9 கோடியில் 10.62 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொகையை உடனடியாக முழுவதுமாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த போராட்டத்தால் ஓ என் ஜி சியின் துணை ஒப்பந்த நிறுவனங்களின் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஏனாம் மண்டல அதிகாரி கவுரி சரோஜா, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர், அவர்கள் விரைவில் மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாக உறுதி அளித்ததால் மீனவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.