பாட்னா: விரைவில் நடைபெறவுள்ள பீகார் சட்டசபை தேர்தலில், தனிக்கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.
பீகார் பாரதீய ஜனதாவில் பிரபல முகமாக ஒரு காலத்தில் அறியப்பட்டவர் யஷ்வந்த் சின்ஹா. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், இவர் செல்வாக்குடன் திகழ்ந்தவர். குறிப்பாக, நரேந்திர மோடிக்கு எதிரானவர்.
நரேந்திர மோடி குழுவினர், பாரதீய ஜனதாவைக் கைப்பற்றியதும், வாஜ்பாய் & அத்வானி காலத்து ஆட்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டனர். இதில், இவரும் முக்கியமானவர்.
இந்நிலையில், சமீப காலங்களாக அரசியல் அரங்கில் தொடர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
இதில், தனிக்கட்சி கண்டு, தானும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார் யஷ்வந்த் சின்ஹா. அவர் கூறியுள்ளதாவது, “நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியால் பீஹார் மாநிலம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
தற்போதைய மோசமான நிலையைக் கண்டு, மீண்டும் அரசியலுக்கு வர நான் முடிவெடுத்துள்ளேன். விரைவில் கட்சி துவங்கி பெயர் அறிவிப்பேன். பீஹாரை முன்னேற்ற எனது கட்சி கடுமையாக உழைக்கும்” என்றார்.