டெல்லி:
மோடி தலைமையிலான பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
“காந்தி சாந்தி யாத்திரை” என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையின் முக்கிய அம்சம், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், டில்லி ஜே.என்.யு., வன்முறை தாக்குதலுக்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படாது என பார்லி.,யில் உறுதி அளிக்க வேண்டும் .
தனது யாத்திரைக்கு “காந்தி சாந்தி யாத்திரை” பெயரிட்டுள்ள சின்ஹா, மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கி, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 5 மாநிலங்கள் வழியாக டெல்லியை வந்தடைகிறது. இந்த யாத்திரையானது, காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளான, ஜனவரி 30ந்தேதி அன்று டெல்லி ராஜ்காட்டில் முடிவடைய உள்ளது.
இந்த யாத்திரையை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், தேசியவாத காங்., கட்சியின் தலைவர் சரத் பவார் தொடங்கி வைத்தார், யாத்திரையுன்போது, யஷ்வந்த் சின்ஹாவுடன் விவசாயிகள் உள்பட பல தரப்பினர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
யஷ்வந்த் சின்காவுடன், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவ்கான், முன்னாள் எம்.பி., சத்ருகன் சின்கா, விதர்பா காங்., தலைவர் ஆசிஷ் தேஷ்முக் ஆகியோரும் யாத்திரையில் செல்கின்றனர்.