டில்லி
முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா முந்தைய அரசைக் குறை கூறி பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம் என கூறி உள்ளார்.
பா ஜ க மூத்த தலைவர்களில் ஒருவரும் முந்தைய பா ஜ க அரசில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா நேற்று ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் இந்தியாவின் பொருளாதார நிலை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்.
அதில் இந்தியப் பொருளாதாரம் தற்போது கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இதற்கு மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் தான் முழுப் பொறுப்பு எனவும் குறிப்பிட்டிருந்தார். இதை மத்தியில் ஆளும் பா ஜ க அரசு மறுத்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ”மோடியின் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறி இருந்தார்.
யஷ்வந்த் சின்ஹாவின் மகனும் தற்போதைய பா ஜ க அரசின் அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா இன்று மற்றொரு ஆங்கிலப் பத்திரிகையில் தனது தந்தைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார், அதில் தனது தந்தை ஒரு சில உண்மைகளை மட்டுமே குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்து கருத்து தெரிவித்ததாகவும், தற்போதைய பொருளாதார சீர்திருத்தத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் கவனிக்க தவறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக யஷ்வந்த் சின்ஹா, ”கடந்த மூன்று மாதங்களில் அது நடந்தது, இது நடந்தது என சொல்வதை விட மூன்று ஆண்டுகளில் பொருளாதாரம் எவ்வாறு சரிந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். தேவை இல்லாமல் முந்தைய அரசை குறை கூறி பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. பதவிக்கு வந்து 40 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முந்தைய அரசை குறை கூறுவது தேவை இல்லாத ஒன்று. மேலும் அவசரகதியில் அறிவிக்கப்பட்ட ஜி எஸ் டி வரி விதிப்பு அனைத்து வர்த்தகங்களையும் பாதிப்பதை மறக்கக் கூடாது” என கூறி உள்ளார்.