டில்லி

டும் இழுபறிக்குப் பின் காஷ்மீரை நேரில் பார்வையிட்ட யஷ்வந்த் சின்ஹா மத்திய பாஜக அரசைக் கடுமையாகச் சாடி உள்ளார்.

அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய பாஜக அரசு மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அத்துடன் அங்குக் கடுமையான கட்டுப் பாடுகளும், தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு அங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

அரசின் இந்த நடவடிக்கைகளைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அத்துடன் காஷ்மீரில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய  குழு அங்குச் செல்ல முயன்றது. அவர்களைக் காஷ்மீர் நிர்வாகம் மாநிலத்தினுள் வர அனுமதிக்கவில்லை.

காஷ்மீர் மக்களின் நிலைமையைப் பார்வையிடுவதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் அங்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார். ஆயினும், காஷ்மீர் செல்வதற்கு அவர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தார்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு,  நேற்று முன் தினம் காஷ்மீர் செல்ல யஷ்வந்த் சின்ஹாவுக்கு அனுமதி கிடைத்தது. பத்திரிகையாளர் பரத் பூஷண், முன்னாள் விமானப்படை துணைத் தளபதி கபில் காக், முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாகத் ஹபிபுல்லா உள்ளிட்டோருடன் யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் காஷ்மீர் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

யஷ்வந்த் சின்கா காஷ்மீரைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம், ”மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்குப் பிறகு, காஷ்மீரில் நிலவும் கள நிலவரத்தை ஆய்வு செய்தோம்.   பாஜக அரசின் இந்த நடவடிக்கையால் இங்குள்ள மக்களின் பொருளாதார நிலை எந்த அளவு பாதிக்கப் பட்டிருக்கிறது என்பது தொடர்பாகப் பல தரப்பு மக்களிடம் கேட்டறிந்து வருகிறோம்.

இங்கு தற்போது கடைகள், வணிக நிறுவனங் கள் மூடப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது பாஜக அரசு தெரிவித்ததைப் போல் இங்கு இயல்பு நிலை திரும்பியதாகத் தெரியவில்லை. அது பொய்த் தகவல் எனத் தோன்றுகிறது.  விரைவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம்: என யஷ்வந்த் சின்ஹா கூறினார்.