டெல்லி: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. இது அதி தீவிர புயலாக மாறும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த சனிக்கிழமை உருவானது. இது மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலைகொண்டிருந்தது. நேற்று (ஞாயிறு) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்தது. தற்போது புயலாக மாறியது.
இந்த யாஷ் புயலானது அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுபெறும் என்றும் யாஸ் புயல் வரும 26ஆம் தேதி ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலைமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் யாஷ்புயல், மேலும் தீவிரமடைந்து மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்பகுதியை மே 26- ஆம் தேதி காலை சென்றடையும்.
இந்த புயலானது வடக்கு ஒடிசா-மேற்கு வங்கத்தை கடந்து, பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, மே 26ம் தேதி மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், இன்றும், நாளையும், பல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.
ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மே 25ம் தேதி பல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ் உள்ளிட்ட சில இடங்களில் தீவிர கனமழையும் பெய்யும்.
மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் மே 25ம் தேதி அன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும். மெதின்பூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ், ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் கன மழை முதல் தீவிர கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.