சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றம் சாட்ட நபர் மற்றொருவருடன் சார் என கூறிய பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், யார் அந்த சார்? என கேள்வி எழுப்பி அதிமுக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் யார் அந்த சார்? என பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், மாலுக்கு வந்து செல்லும் பெண்கள், மாணவ மாணவிகளிடமும் இதுகுறித்து கூறி ஆதரவு திரட்டினர். இதையடுத்து, போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவினர் போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த அண்ணாசாலை போலீசார், முதற்கட்டமாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரை ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது. எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. அதிமுக சார்பில், யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக, யார் அந்த சார் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து? அதிமுக ஐடி விங் தரப்பில், சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ‘யார் அந்த சார்?’ என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது இந்த போராட்டம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
யார் அந்த சார் என கேட்டு போராட்டம் நடத்தியது, தமிழ்நாடு காவல்துறைக்கு ஆபாச வார்த்தையாக தெரிகிறது.