ன் நண்பர்கள் இருவர், பிரபல எழுத்தாளர்   ஒருவரின்  அதி தீவிர வாசகர்கள். நமது நண்பர்களில் ஒருவர் ஐ.டி. நிறுவன அதிகாரி. இன்னொருவர்  உதவி இயக்குநர். விரைவில் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
அந்த எழுத்தாளரை சந்திக்கப்போகலாம் என்று அழைத்தார்கள் இருவரும்.  நான் மறுத்துவிட்டேன்.
“எனக்கும் அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் பிடிக்கும்.  அதற்காக சந்தித்து பேச வேண்டும் என்கிற அவசியமில்லை” என்று மறுத்துவிட்டேன்.
ஐ.டி. நண்பரும், சினிமா நண்பரும் அந்த எழுத்தாளரை சந்திக்க முடிவு செய்தார்கள். ஐ.டி.காரர்தான் அந்த எழுத்தாளருக்கு போன் செய்தார். “தங்களது அதிதீவிர வாசகன் நான். தங்களை சந்திக்க வேண்டும்.” என்று சொன்னவர்,  அந்த எழுத்தாளரின் புத்தகங்களை எல்லாம் வரிசையாக ஒப்பித்தார்.
எழுத்தாளர், தான் மிக பிஸியாக இருப்பதாக சொல்லி, பிறகு பேசும்படி கூறியிருக்கிறார்.
இது நடந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.
நேற்று எனக்கு போன் செய்த ஐ.டி. நண்பர், “தொடர்ந்து அந்த எழுத்தாளருக்கு போன் செய்து அப்பாயிண்ட் மெண்ட் வாங்கிவிட்டேன்.  ஞாயிறு காலை வரச் சொல்லியிருக்கிறார்” என்று உற்சாகமாக சொன்னார்.

ராமண்ணா
ராமண்ணா

“போய் வாருங்கள்” என்றதோடு அந்த பேச்சை முடித்துக்கொண்டேன்.
இன்று (ஞாயிறு) காலை…   ஐ.டி. நண்பரும், உதவி இயக்குநரான நண்பரும் எழுத்தாளரை சந்தித்து திரும்பினார்கள். அந்த  அனுபவத்தை என்னிடம் கூறினார்கள்.
பிரபல நட்சத்திர ஓட்டல் லாபியில் சந்திப்பு நடந்திருக்கிறது..
ஏதோ காரணத்துக்காக அங்கு முன்னதாகவே வந்திருக்கிறார் எழுத்தாளர். இவர்கள் இருவரும் பவ்யமாக அவரை வணங்க.. கால் மேல் கால் போட்டிருந்தவர்.. மெல்ல தலையசைத்து அந்த வணக்கத்தை ஏற்றிருக்கிறார்.
ஐ.டி .கம்பெனி நண்பர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள.. அடுத்தவரை அறைமுகப்படுத்தும் முன்பு எழுத்தாளர் பேச ஆரம்பித்திருக்கிறார்.
“அறிமுகம்” என்பதைப்பற்றி அத்தனை விசயங்களைப் பேசினாராம் எழுத்தாளர். பிறகு வேறு ஏதேதோ பேசியிருக்கிறா. இடையிடையே, தனக்கு கிடைத்த கிடைக்காத அங்கீகாரங்கள் பற்றி மகிழ்ச்சியும் ஆதங்கமுமாகவும் எழுத்தாளர் பேசியிருக்கிறார்.
கால் மேல் கால் போட்டபடி  எழுத்தாளர்  கம்பீரமாக வகுப்பெடுக்க.. இருவரும் கைகட்டி அவர் பேசுவதை எல்லாம் பவ்யமாக கேட்டிருக்கிறார்கள்.
இடையில் காபிக்கு ஆர்டர் செய்திருக்கிறார் ஐடி நண்பர். அந்த இடைவேளையில், நமது உதவி இயக்குநரான நண்பர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
அவ்வளவுதான்.. அதுவரை அந்த எழுத்தாளரிடம் இருந்த கம்பீரம் காணாமல் போய்விட்டதாம். கால் மேல் போட்டிருந்த காலை தரைக்கு கொண்டு வந்திருக்கிறார். கண்களில், பேச்சில் இருந்த மிதமிஞ்சிய கர்வம் காணாமல் போயிருக்கிறது.
நமது சினிமா நண்பரிடம், “சொல்லுங்க சார்.. யார் ப்ரடியூசர்.. நாட் (கதைக்கரு) என்ன…” என்றெல்லாம்  அக்கறையாக விசாரிக்க ஆரம்பித்துவிட்டார் எழுத்தாளர்.
அவ்வப்போது திரைப்படங்களுக்கு வசனம் எழுதுபவர் ஆயிற்றே அந்த எழுத்தாளர். அதுதான் பவ்யத்துக்குக் காரணம்!
“அதுவரை அவர் மீது இருந்த பிம்பம் உடைந்துவிட்டது… அவரது எழுத்தின் வீச்சு என்ன.. அதற்கேற் கம்பீரம்தான் என்ன…! ஆனால் சினிமாகாரன் என்றவுடன் இப்படி அசடு வழிந்து வாய்ப்பு கேட்கிறாரே…
அவரது புத்தகங்களை ஆர்வத்துடன் படித்து அவரிடம் பேச வரும் வாசகனை மதிப்பதில்லை. ஆனால் திரைத்துறை ஆள் என்றவுடன் பவ்யமாகிறார்” என்று வருத்தப்பட்டார்கள் நண்பர்கள்.
“எழுத்தாளர்கள் பலரது குணம் அறிந்தவன் என்பதால்தான் அவர்களது நேரடி சந்திப்பை நான் விரும்புவதில்லை” என்றேன் நான்.
”எஸ்…” என்றார் வசனகர்த்தா நண்பர்.
“ராமா.. கிருஷ்ணா..” என்று தலையில் அடித்துக்கொண்டார் ஐ.டி. நண்பர்.