சென்னை: குலதெய்வவழிபாட்டை தடை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவி வரும் வதந்திகளுக்கு ஆளுநர் மாளிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளத.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த சம்பவம் சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன என்றும் தமிழ்நாடு அரசை ஆளுநர் குற்றம்சாட்டி இருந்தார்.
ஆனால், இதை திரித்து சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பின. ‘தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராய மரணங்களுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களைத் தடைசெய்ய வேண்டும். குலதெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக சமூகவலைத்தலங்களில் செய்திகள் பரவின. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. குலதெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக வதந்தி பரப்பப்படுகிறது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளிக்கத்துள்ளது. அத்துடன் இந்த வதந்தியை பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளத.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராய சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களைத் தடைசெய்ய வேண்டும். குலதெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் – ஆளுநர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.
இந்த விஷயத்தில், இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது.
இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது.
இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததற்காக பொதுமக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
சமுக ஊடகங்களை கண்காணித்து, திமுக அரசுக்கு எதிராக பதிவிடுவோர் மற்றும் பேசுவோரை, இரவோடு இரவாக கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் தமிழ்நாடுஅரசின் சைபர் கிரைம், இந்த விஷயத்திலும் கவனம் செலுத்தி வதந்தி பரப்பியவர்களை உடனே கைது செய்யுமா? காவல்துறையின் நடவடிக்கையை…. காவல்துறையா? ஏவல்துறையா? என்பதை பார்க்கலாம்….