உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகப் போற்றப்படுபவர் நாடியா கோமனேசி, ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

1976 ல் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது 14 வயதுப் பெண்ணாக ருமேனியா சார்பில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்ற இவர் ‘பெர்பக்ட்-10’ (Perfect 10) என்கிற 10 க்கு 10 புள்ளிகளை முதன்முதலாக எடுத்து அசத்தியவர்.

ஐந்து முறை தங்கப் பதக்கம் வென்றிருக்கும் இவர் மொத்தம் ஒன்பது ஒலிம்பிக் பதங்கங்களைப் பெற்றுள்ளார்.

இந்தியாவின் சார்பில் தடகள போட்டிகளில் இதுவரை யாரும் தங்கம் வெல்லாத நிலையில், முதல் முறையாக அந்தக் கனவை நிறைவேற்றி இருக்கிறார் 23 வயதாகும் இந்திய ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.

ஈட்டி எறிந்து தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதில், 60 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான நாடியா கோமனேசியின் பாராட்டு சிறப்பு வாய்ந்த ஒன்றாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது.