’உலகின் மிகவும் கவலையான யானை’ தனது 43வது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளது. பிற யானைகளின் துணையின்றி சுமார் 40 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்த யானை உயிரிழந்தது உயிரியல் பூங்கா அதிகாரிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே மிகவும் கவலையடைந்த யானை என்று ஃப்லேவியா என்ற பெண் யானை அழைக்கப்படுகிறது. இந்த யானை சுமார் 40 ஆண்டுகளாக தெற்கு ஸ்பெயினில் உள்ள கார்டோபா உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வந்தது. தனது 3 வயதில் அந்த பூங்காவிற்கு அழைத்து வரப்பட்ட ஃப்லேவியா(யானை) தான் இறக்கும் வரை எந்த யானையுடனும் உறவு வைத்துக் கொள்ளவில்லை. பிற விலங்குகள் மற்றும் யானைகளிடம் இருந்து ஃப்லேவியா ஒதுங்கியே இருந்தது. இதனால் இந்த யானை கவலை அடைந்த யானை என்றே அழைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஃப்லேவியா உயிரிழந்ததாக கார்டோபா உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது. இந்த யானையின் உயிரிழப்பு தங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானையை பரிசோதித்து வந்த அதிகாரிகள் கூறுகையில், “ இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அந்த யானை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. அது மிகுந்த மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்தது” என தெரிவித்தனர்.
மன அழுத்தத்திற்கு உள்ளான யானையை குணமாக்கும் பொருட்டு விலங்குகள் நல உரிமைகள் அமைப்பு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வந்தது. ஃப்லேவியாவை வேறு இடத்திற்கு மாற்றி அதனுடன் பிற யானைகளை பழக விலங்குகள் நல உரிமைகள் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனாலும், ஃப்லேவியா தனிமையிலேயே வாழ்ந்து வந்ததால் எந்த ஒரு யானையுடனும் ஒத்துப் போகவில்லை. அவற்றை விட்டு ஒதுங்கியே இருந்தது. இதனால் அந்த யானையுடன் பிற யானையை விட்டு பழகவும், இனப்பெருக்கம் செய்வதிலும் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு சவாலாகவே இருந்தது. அவர்களின் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
என்ன செய்தாலும் ஃப்லேவியாவின் மன அழுத்தத்தை அதிகாரிகளால் குறைக்க முடியாமல் போனது. பொதுவாக, மனிதர்களை போன்று யானைகள் கூட்டமாக குடும்பத்துடன் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழ்ந்து வருபவை. ஒரு யானை தனிமையில் வாழ்ந்தது இதுவே முதல் முறை. இனிமேல் எந்தஒரு விலங்கும் இது போன்று நடந்துக்காது என உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.