புடாபெஸ்ட்: உலகின் வயதான(வாழும்) ஒலிம்பிக் சாம்பியன் ஏக்னஸ் கெலட்டி, அடுத்த மாதம் தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கவுள்ளார்.
இவர், கடந்த இரண்டாம் உலகப்போரின்போது, நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட யூத இன அழிப்பு நடவடிக்கையிலிருந்து உயிர் தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஏக்னஸ் கெலட்டி, உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் என்ற பெயரைப் பெறும் பெண்மணி ஆகியுள்ளார். அவர், கொரோனா பரவலிலிருந்தும் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் சிறப்பாக உணர்கிறேன், ஆனால், கண்ணாடியைப் பார்ப்பதில்லை. அது என்னுடைய ஒரு உபாயம்! இதனால், இளமையாக இருக்கிறேன்” என்றுள்ளார் அவர்.
யூத இனத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி, மொத்தம் 5 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம், ஹங்கேரியின் வெற்றிகரமான ஒலிம்பிக் வீராங்கனை என்ற பெயரைப் பெற்றுள்ளதோடு, யூத இனத்தில் பிறந்து, இந்த சாதனையை செய்த ஒரே நபர் என்ற பெருமையையும் ஈட்டியுள்ளார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி, இவர் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
கடந்த 1921ம் ஆண்டு பிறந்த இவர், மொத்தமாக 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார். இவர் 30 வயதைத் தாண்டிய பிறகு பல பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் போட்டியாளர்கள் பலர், இவரின் பாதி வயதுடையவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.