அசாமில், ஐ.வி.எஃப். (IVF) முறையில் கருத்தரித்த பசு ஒன்று கன்றை ஈன்றுள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்புத் துறையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அசாமின் உள்ளூர் இனமான ‘லக்கிமி’ (Lakhimi) பசு, ஐ.வி.எஃப். முறையில் பெண் கன்றை ஈன்றுள்ளது. இந்த இனத்தில் ஐ.வி.எஃப். முறையில் கன்று பிறப்பது இதுவே முதல்முறையாகும். மேலும், ஐ.வி.எஃப். மூலம் உலகிலேயே பிறந்த முதல் கன்று இதுவாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சமூக வலைதளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அசாம் இன்று ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. அசாம் கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகத்தில், ஐ.வி.எஃப். முறையில் அசாமின் உள்ளூர் ‘லக்கிமி’ இனத்தைச் சேர்ந்த பசு பெண் கன்றை ஈன்றுள்ளது. ஐ.வி.எஃப். மூலம் பிறந்த உலகின் முதல் கன்று இதுவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாதனை மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உள்ளூர் கால்நடை இனங்களைப் பாதுகாப்பது, நோய்களைக் கட்டுப்படுத்துவது, பால் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது போன்ற பல்வேறு வழிகளில் இந்த தொழில்நுட்பம் உதவும் என கூறியுள்ளார்.
இந்த சாதனைக்காக உழைத்த கால்நடை மருத்துவ விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுக்கும் முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எப்படி ஐ.வி.எஃப். முறையில் கன்று பிறக்கிறது?
இதுவரை செயற்கை கருவூட்டல் முறையில், காளையின் விந்தணுக்கள் நேரடியாக பசுவின் கருப்பையில் செலுத்தப்பட்டு கருத்தரிப்பு ஏற்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், ஐ.வி.எஃப். முறையில் பசுவின் கருமுட்டை (அண்டாணு) முதலில் வெளியே எடுக்கப்படுகிறது. பின்னர் ஆய்வகத்தில் காளையின் விந்தணுவுடன் அதைச் சேர்த்து கருவாக உருவாக்கப்படுகிறது. அந்த கருவை மீண்டும் பசுவின் கருப்பையில் செலுத்துகின்றனர்.
இந்த முறையின் மூலம் தற்போது அசாமின் உள்ளூர் ‘லக்கிமி’ இனத்தைச் சேர்ந்த பசு வெற்றிகரமாக பெண் கன்றை ஈன்றுள்ளது. சிறிய கன்றாக இருந்தாலும், அசாமின் கால்நடைத் துறையில் மட்டுமின்றி உயிரித் தொழில்நுட்பத் துறையிலும் இது முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.