புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 6, 7ம் தேதிகளில் 14வது உலக தமிழ் பண்பாட்டு மாநாடு நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; புதுச்சேரி பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதி தமிழியற்புலம் மற்றும் மானிடவியல் துறை, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இணைந்து நடத்தும் 14வது உலக தமிழ் பண்பாட்டு மாநாடு பிப்ரவரி 6, 7ம் தேதிகளில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, துணைவேந்தர் குர்மீத்சிங் மாநாட்டு தலைமை காப்பாளராகவும், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க தலைமையக தலைவர் அடைக்கல முத்து இளஞ்செழியன், இந்திய தலைவர் நல்லுசாமி ஆகியோர் காப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு, இம்மாநாட்டை துவக்கி வைக்கிறார் துணைவேந்தர் குர்மீத்சிங். மாநாட்டு மலரை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டு, உலகத் தமிழ்மாமணி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். புதிய நுால்களை, சபாநாயகர் சிவக்கொழுந்து வெளியிடுகிறார்.
இரு தினங்களிலும் 12 தலைப்புகளில் சிறப்பு அமர்வுகள் நடைபெறவுள்ளன. 14 ஆய்வரங்கங்களில் 90க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 3 கருத்தரங்குகள் மற்றும் 4 பாட்டரங்குகளும் நடைபெறவுள்ளன.
பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. 17 நாடுகளில் இருந்து 70 தமிழறிஞர்களும், நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட அறிஞர்களும் பங்கேற்க உள்ளனர்.