இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் ஃப்ளைவெயிட் (52 கிலோ) இறுதிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜூடாமாஸை வீழ்த்தி உலக சாம்பியனானார்.

இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஐந்தாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை ஜரீன் பெற்றார்.

மகளிர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆறு முறை வென்ற மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010 மற்றும் 2018) சரிதா தேவி (2006), ஜென்னி ஆர்.எல் (2006) மற்றும் லேகா கே.சி (2006) ஆகியோர் பட்டம் வென்ற மற்ற வீராங்கனைகள்.

இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த பட்டியலில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஜரீன் இடம்பிடித்துள்ளார்.

துருக்கியில் நடைபெறும் இந்தப் போட்டியில் 12 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. அதில், ஜரீனின் தங்கம் தவிர, மனிஷா மவுன் (57 கிலோ பிரிவு) மற்றும் அறிமுக வீராங்கனை பர்வீன் ஹூடா (63 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

2018 ம் ஆண்டு 48 கிலோ பிரிவில் மேரி கோம் தங்கம் வென்றார் இதனை அடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீராங்கனை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.