திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

திருத்தணி அருகே உள்ள சூர்யநகரம், தெக்கலூர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் வயல் வெளியில் உள்ள கிணற்று நீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கிணற்று நீரும் வறண்டதால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திருத்தணி – பொதட்டூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருத்தணி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.