திருவனந்தபுரம்:
சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கோரி, கேரளாவில் இன்று பிரமாண்ட பெண்கள் மனித சங்கிலி நடைபெற உள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டத்தை ஆளும் கம்யூனிஸ்டு அரசு முன்னெடுத்து உள்ளது.
வனிதா மதில் என்ற பெயரில், காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 14 மாவட்டங்களில் 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மனிதச் சங்கிலி நடைபெறுகிறது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாக 10 லட்சம் பெண்கள் கலந்துகொள்ளும் வகையில் வனிதா மதில் பெண்கள் சுவர் என்ற பெயரில் பிரமாண்ட மனித சங்கிலி போராட்டம் நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று பிரமாண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில் 10 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள அமைச்சர்கள், லட்சக்கணக்கான பெண்கள், பல்வேறு மகளிர் அமைப்பினர், திரைப்பட நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து பிரிவு மகளிரும் மனிதச் சங்கிலியில் பங்கேற்க கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.