லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இந்திய மண்ணில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது.
அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, மிகவும் மோசமாக ஆடியது. மொத்தமாக 41 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் லாரா கூடால் 49 ரன்களையும், சூன் லூஸ் 36 ரன்களையும் அடித்தனர்.
பின்னர், எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய பெண்கள் அணி. துவக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகுஸ் 9 ரன்களில் அவுட்டாக, ஸ்மிருதி மந்தனா 80 ரன்களை 64 பந்துகளில் அடித்தார். மூன்றாவது வீராங்கனை புனம் ராவத் 62 ரன்களை அடிக்க, 28.4 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டுமே இழந்து, 160 ரன்கள் எடுத்த இந்திய அணி, 9 விக்கெட்டுகளில் வென்று, தற்போதைக்கு தொடரை சமன் செய்துள்ளது.