திருவனந்தபுரம்

முன் காலத்தில் சபரிமலையில் பெண்கள் வழிபட்டு வந்தனர் என கேரள அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

சபரிமலைக் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.   இந்தத் தடையை நீக்கக் கோரி பல பெண் உரிமை அமைப்பினர் போராடி வருகின்றனர்.   இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த அனுமதி மறுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.   இந்தக் கோவில் திருவாங்கூர் தேவசம் போர்டால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.  இந்த போர்ட் கேரள அறநிலையத்துறையின் கட்டுப்பட்டில் உள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசகராக பணியாற்றிய நாயர் என்பவர் கடந்த வாரம் சபரிமலை வரும் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தும் குழுவின் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார்.    அவர் 1940களில் தன் தாயின் மடியில் அமர்ந்து கோயில் பூஜைகளை பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.   அதைத் தொடர்ந்து தற்போது கேரளா அறநிலையத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், “முன்பு ஒரு காலத்தில் சபரிமலைக் கோயிலில் பெண்கள் வழிபட்டுள்ளனர்.   குறிப்பாக அரச குடும்ப பெண்கள் வழிபாடு செய்வது வழக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.   சபரிமலையின் தாந்திரிக குடும்பத்தை சேர்ந்த ராகுல் ஈஸ்வர், “இந்த தகவல்கள் எல்லாம் பொய்த் தகவல்கள் ஆகும்.   என்னிடம் கடந்த 1812 ல் இருந்து குறிப்பிட்ட வயதில் உள்ள பெண்களுக்கு கோயிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.  பிரிட்டிஷார் ஆட்சிக்கு வரும் முன்னர் இருந்தே இந்த வழக்கம் தொடர்ந்து அமுலில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.