பணிக்கு செல்லும் பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறமுடியாது அதற்கு ஆதாரம் அவசியம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், பெண்ணின் நடத்தையை சந்தேகித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து கணவனை கொடுமை செய்ததாக விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் தன்னை துன்புறுத்துவதாகவும் குடும்ப நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையேற்று அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருப்பதாக ஊகிக்க முடிவதாகக் கூறி அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, இந்த வழக்கை நீதிபதிகள் சுதிர் சிங் மற்றும் ஹர்ஷ் பங்கர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
2014ம் ஆண்டு திருமணமான பிறகு மனைவி தன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுப்பதாவும் மாற்றுத்திறனாளியான தனது தாயாரை கவனித்துக் கொள்ளவில்லை என்றும் கூறி திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தவிர, கடைக்குச் சென்றபோது டி-ஷர்ட்டை எடுத்து தனது ஹேன்ட் பேகிற்குள் மறைத்து வைத்திருந்ததாக மனைவி பிடிப்பட்டதால் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும்.
நீதித்துறை அதிகாரி ஒருவருடன் தனது மனைவி நெருக்கமாக பழகி வருவதாகவும் அவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும், திருமணத்திற்கு முன் அந்தப் பெண் ஆஸ்திரேலியா நாட்டில் படிக்க சென்ற போது ஒரு ஆணுடன் தனியாக வீடுஎடுத்து வசித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமணத்திற்கு முன் வெளிநாட்டில் அந்த பெண் ஒரு ஆணுடன் தனியாக வீடு எடுத்து தங்கியிருப்பதாக தற்போது கூறுவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும், விசாரணையில் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் சூழலில் சூழ்நிலை காரணமாக அந்தப் பெண் ஒரு ஆணுடன் தங்கியிருந்தது தற்செயலாக நடந்த ஒன்று.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் பல நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தகள் தங்கள் செலவினத்தை மிச்சப்படுத்த இதுபோல் ஆணும் பெண்ணும் ஒரே இடத்தில் சேர்ந்து வசிப்பது சகஜமானது.
தவிர, இந்தியாவிலும் இதேபோன்று நட்புணர்வுடன் ஒரே இடத்தில் தங்குவது என்பது நிகழ்கிறது.
தற்போதைய சூழலில் பணிக்கு செல்லும் பெண்கள் தனது சக பணியாளருடன் ஒன்றாக செல்லவேண்டிய நிலை அனைத்து பெண்களுக்கு உள்ளது.
இதனால் பணிக்கு செல்லும் பெண்கள் கள்ளத்தொடர்பில் இருப்பதாக ஊகிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள்.
கணவரை அந்தப் பெண் துன்புறுத்தியதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இனி கருத்தொற்றுமையுடன் வாழ்வது என்பது இயலாத காரியம் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம். பெண்ணின் நடத்தையை சந்தேகித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து கணவனை கொடுமை செய்ததாக விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.