சண்டிகர்: பெண் சிசுக் கொலை மற்றும் கெளரவக் கொலைகளுக்கு பெயர்பெற்ற ஹரியானா மாநிலத்தில், பல ஆண் அரசியல்வாதிகளுக்குப் பின்புலத்தில், அவர்களின் குடும்பப் பெண்கள் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக செளதாலா, பிஷ்னோய் மற்றும் ஹுடா ஆகிய குடும்பப் பின்னணிகளைக் கொண்ட பெண்கள், இந்த தேர்தல் பிரச்சாரத்தில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தங்கள் வீட்டு ஆண்களின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மே மாதம் 12ம் தேதி அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அப்பெண்களில் குறிப்பிடத்தக்க சிலரைப் பார்ப்போம்;
ரேணுகா பிஷ்னோய் – முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன் லாலின் மருமகள். மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த குல்தீப் பிஷ்னோயின் மனைவி. முதன்முறையாக காங்கிரஸ் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாவ்யா பிஷ்னோயின் தாயார்.
நெய்னா செளதாலா – முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலாவின் மருமகள், அஜய் செளதாலாவின் மனைவி. தற்போது, லோக்சபா தேர்தல்களில் போட்டியிடும் துஷ்யந்த் செளதாலா மற்றும் திக்விஜய் செளதாலா ஆகியோரின் தாயார்.
ஆஷா ஹுடா – முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடாவின் மனைவி மற்றும் தீபேந்தர் ஹுடாடாவின் தாயார். தந்தை மற்றும் மகன் இருவருமே இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்றனர்.
எப்போதுமே ஆண் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் மிகுந்த ஹரியானாவில், இந்தப் பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களுக்காக கடுமையாக தேர்தல் பணியாற்றிக் கொண்டுள்ளார்கள்.