டில்லி:

லைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண், நேற்று உச்சநீதிமன்றத் தில்  விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான புகாருக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பாலியல்  குற்றம்சாட்டிய பெண் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜரானார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கோகோ யின் வீட்டு அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் கடந்த 19-ம் தேதி பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. இதை மறுத்த ரஞ்சன் கோகாய், பாலியல் புகார் தொடர்பாக  ஆய்வுசெய்ய உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வைத் கடந்த 20-ஆம் தேதி கூட்டி விவாதித்தார். அப்போது, இந்தப் புகார் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், இதன் பின்னணியில் பெரும் சதித்திட்டம் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, பாலியல் புகார்  தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையில் நீதிமன்ற அமர்வு அமைக்கப்பட்டது. அதில், நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றனர். பின்னர் ரமணா மீது மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதால், அவர் அமர்வில் இருந்து விலகினார். அவருக்கு பதில் நீதிபதி  இந்து மல்ஹோத்ரா சேர்க்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, புகார் கூறிய பெண்ணுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.  இதையடுத்து புகார் கூறிய பெண் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம்  தனியறையில் நீதிபதிகள் அமர்வு விசாரணையை  தொடங்கியது.

விசாரணையின்போது, புகார் கூறிய பெண் தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், அந்தப் பெண்ணிடம் மட்டுமே தனிப்பட்ட முறையில் நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.