டில்லி
துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங் நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி கோரி அமித் ஷாவுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதி உள்ளார்.
நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிர்பயா பலாத்காரக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதன்பிறகு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை இந்த தண்டனையை உறுதி செய்தன.
அதன் பிறகு அவர்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தனர். இந்த மனு வெகு நாட்களாக நிலுவையில் இருந்தது. சமீபத்தில் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இந்த குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங் பல பதக்கங்களை பெற்ற வீராங்கனை ஆவார். இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இந்த குற்றவாளிகளைத் தூக்கிடும் பணியில் தம்மை நியமிக்கக் கோரி ரத்தத்தில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அது குறித்து வர்திகா சிங், “நான் நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு அந்த வாய்ப்பை நீங்கள் தர வேண்டும். ஒரு பெண்ணாலும் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என்பதை இதன் மூலம் இந்நாடு அறிந்துகொள்ளும்.
இதற்குப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகைகள் உள்ளிட்டோர் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். சமூகத்தில் இது ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.