10 மாத குழந்தையின் பாசப்போராட்டம்.. கண்ணீர் விட்ட  பெண் காவலர்..

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு அருகே உள்ள மருத்துவமனை தெருவில், கை குழந்தை ஒன்று முட்புதரில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல் ஆய்வாளர் ஜெயதேவி, முதல் நிலை பெண் காவலர் ஜெயலெட்சுமி உள்ளிட்ட போலீஸார் அந்த இடத்திற்கு சென்று முட்செடிகளுக்கு நடுவே கிடந்த 10 மாத பெண்குழந்தையை மீட்டனர்.

அக்குழந்தைக்கு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர் அந்த குழந்தையை திருச்சி சைல்ட் லைனில் போலீசார் ஒப்படைக்க முயன்றனர்.  அப்போது அந்த குழந்தையின் பாசத்தால் அழத் தொடங்கியது.  முதல்நிலை காவலர் ஜெயலட்சுமியைத் தவிர வேறு யாரிடம் சென்றாலும் அந்த குழந்தை அழுகத்தொடங்கி விடுகிறது.

முட்புதரில் இருந்து குழந்தையை மீட்டது முதல் அதற்கு பால், பிஸ்கட் கொடுத்து, கையிலேயே வைத்து, தட்டித்  தூங்க வைத்த முதல்நிலை காவலர் ஜெயலட்சுமியை தாய் என நினைத்து பாசத்துடன் ஒட்டிக்கொண்டது அந்த குழந்தை.  சைல்ட் லைன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதும் அழத் தொடங்கும்  குழந்தை காவலர் ஜெயலட்சுமி கைக்கு வந்த உடனே அழுகையை நிறுத்தியது அனைவரையும் நெகிழச்செய்வதாக இருந்தது.

10 மாத கைக்குழந்தையை முட்புதரில் வீசி சென்றது யார் என்பது குறித்து, துவரங்குறிச்சி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– லெட்சுமி பிரியா