மின்ஸ்க், பெலாரஸ்

பெலாரஸ் நாட்டில் தொடர்ந்து  அதிபராக உள்ள அலெக்சாண்டர் லுகாசென்கோவை எதிர்த்துப் போட்டியிடும் பெண் வேட்பாளருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

சோவியத் யூனியனில் இருந்து பல நாடுகள் பிரிந்து சுதந்திர நாடுகளாகச் செயல்பட்டு வருகின்றன.  அவற்றில் பெலாரஸ் நாடும் ஒன்றாகும்.   இந்நாட்டின் மக்கள் தொகை 95 லட்சம்  ஆகும்.  இங்கு கடந்த 1994 முதல் அலெக்சாண்டர் லுகாசென்கோ அதிபராகப் பதவியில் உள்ளார்.   இதுவரை தொடர்ந்து 5 முறை அதிபராக அவர் இருந்துள்ளார்.

பெலாரஸ் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது.   இதில்  அலெக்சாண்டர் மீண்டும் ஆறாம் முறையாக அதிபர் ஆக களத்தில் இறங்கி உள்ளார்.  அவருக்கு எதிராக உள்ள வேட்பாளர்களில் ஒரு பெண் வேட்பாளரான ஸ்வெட்லானா டிகானோவிஸ்கி  அதிக ஆதரவுடன் உள்ளார்.  சுமார் 37 வயதாகும் இவர் ஒரு குழந்தையுடன் உள்ள ஒரு இல்லத்தரசி ஆவார்.

இவருடைய கணவரான செர்கெய் டிகானோவிஸ்கி என்னும் பிரபல பிளாக் எழுத்தாளர் அதிபர் பதவியில் போட்டியிடுவதாக இருந்தர்.  ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டதால் அவர் மனைவி ஸ்வெட்லானா அதிபர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.  அவருக்கு நாடெங்கும் ஆதரவு பெருகி தற்போது அதிபருக்கு எதிரான வலிமையான வேட்பாளராக உள்ளார்.

 இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் தற்போதைய அதிபர் லுகாசென்கோ வெற்றி பெறுவது சந்தேகம் என அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.   ஆனால் எதிர்க்கட்சிகள் இடையே இது குறித்த ஒரு நிச்சயமான கருத்து இல்லாமல் உள்ளது.   இவ்வளவு பரபரப்புக்கிடையில் தற்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஒருவேளை தாம் தோல்வி அடைந்தாலும் அதற்காகப் போராட்டம் நடத்தப்போவதில்லை என ஸ்வெட்லான கூறி உள்ளார்,  அதே வேளையில் தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.  பொதுவாக அடித்தட்டு மக்களிடையே ஸ்வெட்லானாவுக்கு நல்ல ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.