டில்லி
காந்தி குடும்பத்தினர் இல்லை எனில் இந்தியாவில் காங்கிரஸ் இருக்காது என மணி சங்கர ஐயர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். இதை காங்கிரஸ் செயற்குழு கடுமையாக எதிர்த்துள்ளது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி மட்டுமே தலைமை வகிக்க முடியும் என மூத்த தலைவர்கள் பலரும் கூறினார்கள்.
ஆனால் ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் முடிவில் பிடிவாதமாக உள்ளார். இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரான மணி சங்கர் ஐயர், “ராகுல் காந்தி மட்டுமே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்பதில் ஐயம் இல்லை. அதே நேரத்தில் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். அத்துடன் அவர் குடும்பத்தினர் காங்கிரஸில் இருந்து விலகலாம் என செய்திகள் வருகின்ரன.
இந்த இரு முடிவுகளுமே தவறானதாகும். காந்தி குடும்பத்தை சேராத பிரம்மானந்த ரெட்டி போன்றோர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்துள்ளனர். ஆனால் அப்போதெல்லம் காந்தி குடும்பத்தினர் காட்டிய வழியில் காங்கிரஸ் இயங்கி வந்தது எனவே காந்தி குடும்பம் இல்லாத காங்கிரஸ் என்பது சரி அல்ல. ஏனென்றால் காந்தி குடும்பம் இல்லை எனில் இந்தியாவில் காங்கிரஸ் இருக்காது” என தெரிவித்துள்ளார்.