திருவனந்தபுரம்:
கொரோனா சோதனை செய்தபிறகே வெளிநாடுகளில் இருந்து இந்தியர்ளை அழைத்து வர வேண்டும் என்று மத்தியஅரசிடம் வலியுறுத்தி இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
கொரேனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விமான சேவை உள்பட அனைத்துவிதமான பயணிகள் சேவையும் தடை செய்யப்பட்டது. இதனால், வெளிநாடுகளில் வசித்து வந்த ஏராளமான இந்தியர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, வரும் 7ந்தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இந்தியா அழைத்து வரப்படுவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படு வார்கள். 7-வது நாள் அவர்களிடம் கொரோனா சோதனை நடத்தப்படும். இதில் நெகடிவாக இருந்தால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மாநில அரசுகள் சார்பில் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் முன், விமானத்தில் ஒருவர் ஏற்றப்படும் முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் பேராபத்து ஏற்பட்டு விடும். விமானத்தில் 200 பேர் இருப்பார்கள். அதில் ஒருவர் அல்லது இருவருக்கு கொரோனா இருந்தால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது இங்கும் கொரோனா பரவக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு ரூ. 50 ஆயிரமும், அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு ரூ. 1 லட்சமும் விமானக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதேபோன்று மேற்காசியா, மாலத்தீவுகளில் இருந்து இந்தியா வர விரும்புவோரை அழைத்து வருவதற்கு கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்பு வளைகுடா போர் நடைபெற்றபோது கப்பல் மூலமாகத்தான் 1.70 லட்சம் இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.