டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடியை 60 நாட்களுக்குள் சரி செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் நிருபர்ளுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘வங்கி மோசடியில் ஈடுபடும் நிரவ் மோடி போன்றவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறது என்பதை தெரியபடுத்த வேண்டும். தற்போது வரை நாட்டிற்கு ரூ. 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல வங்கிகளின் மோசடி விரைவில் வெளிவரவுள்ளது. அடுத்து ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸில் ரூ.390 கோடி மோசடி நடந்துள்ளது.

மிக விலை உயர்ந்த காவலாளியாக செயல்படும் பிரதமர் மோடியின் மூக்கிற்கு கீழ் இத்தகைய மோசடி சம்பவங்கள் நடப்பது ஆச்சர்யமாக உள்ளது. வங்கி நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் நாட்டின் பொருளாதாரத்தையும், சர்வதேச வர்த்தக முதலீடுகளையும் பாதிக்கும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?. வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் திரும்ப நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மோடி தெரிவித்துள்ளார். அவர்களை திரும்ப அழைத்து வரும் பிரச்னையை விட்டுவிடுங்கள். முதலில் அவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்? என்பதை தெரியபடுத்த வேண்டும்.

முதலில் ‘2ஜி’ என்றார்கள். இப்போது பிஎன்பி மோசடியை ‘நிமோஜி’ என்று தான் அழைப்போம். நாட்டிற்கு பிரதமர் உத்தரவாதம் அளிக்கும் வரை வங்கி மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு நிர்வாகம் துணை போகிறது என்ற எண்ணம் தான் மக்களிடம் ஏற்படும். இந்த விவகாரத்தில் ஆர்பிஐ விசாரணைக்கு விரைந்து உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தை 60 நாட்களுக்குள் சரி செய்ய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, வங்கி நிர்வாங்களுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் ’’ என்றார்..