போரோன்

ப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் 350க்கும் அதிகமான யானைகள் மர்மமாக மரணம் அடைந்துள்ளன.

ஆப்பிரிக்க கண்டத்தில் வன விலங்குகள் அதிகம் வசிக்கின்றன.   இங்குள்ள யானைகள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது மட்டுமின்றி உருவத்திலும் பிரம்மாண்டமாக காணப்படும்.  இந்த கண்டத்தில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் கடந்த இரு மாதங்களாகக் கூட்டம் கூட்டமாக மர்மமான முறையில் யானைகள் உயிரிழந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொண்டு அமைப்பான நேஷனல் பார்க் ரெஸ்யூம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் நியால் மைக்கேன், “மே மாத தொடக்கத்தில் ஒகவாங்கோ  பகுதியில் விமானத்தில் சென்ற உயிரின பாதுகாவலர்கள் இறந்த யானைகள் உடல் கிடப்பதைக் கண்டுள்ளனர்.  எனவே அந்நாட்டு அரசுக்கு அவர்கள் உடனடியாக தகவல்கள் அளித்துள்ளனர்.

அரசு அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. உயிரின பாதுகாவலர்கள் தங்களது மூன்று மணி நேரப் பயணத்தின் போது 169 யானைகளில் இறந்த உடல்களைக் கண்டுள்ளனர்.  இவ்வாறு குறுகிய நேரத்தில் இத்தனை யானைகள் இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளது மிகவும் அபாயகரமானதாகும்.

இந்த தகவல் அறிந்த நாங்கள் எங்கள் குழுவினருடன் இப்பகுதியில் ஆய்வு நடத்தினோம்.  இங்கு சுமார் 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களைக் கண்டு அதிர்ந்தோம்   தற்போது இந்தப் பகுதியில் வறட்சி இல்லாத போது இவ்வளவு யானைகள் கொத்தாக மரணம் அடைந்துள்ளது ஒரு அதிசய நிகழ்வாகும்.

போட்ஸ்வானா அரசு இறந்த யானைகளிடம் தந்தம் இல்லாததால் இவைகள் வேட்டையாடப்பட்டு உயிர் இழந்திருக்கலாம் எனக் கூறுகிறது.  ஆனால் விலங்கு வேட்டைக்காரர்கள் சயனைடை பயன்படுத்துவது வழக்கமாகும்.  அவ்வாறு பயன்படுத்தி இருந்தால் அதை உண்ட அனைத்து உயிரினங்களும் இறந்திருக்கும்.    தற்போது யானைகள் மட்டுமே உயிர் இழந்துள்ளன.

சென்ற வருடம் ஆந்தராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் மரணம் அடைந்தன   அதைப் போல் இப்போதும் நோய்க்கிருமி தாக்குதலால் யானைகள் மரணம் அடைந்திருக்கலாம்.  மரணம் அடைந்துள்ள யானைகள் முகம் தெரியும்படியான கோணத்தில் விழுந்து இறந்துள்ளன.  அதுமட்டுமின்றி உயிருடன் உள்ள யானைகளும் வட்டப்பாதையில் நடக்கின்றன.

ஆகவே யானைகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது  யானைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நோயின் தாக்கம் மனிதர்களுக்கும் பரவ மிகவும் வாய்ப்பு உள்ளது.  இந்த நோய் நீர் மற்றும் மண் வழியாகப் பரவ மிகுந்த வாய்ப்பு உள்ளது.  எனவே உலக நாடுகள் இது குறித்து முழு கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.