காத்மண்டு:

உலகின் மிகப்பெரிய மலை சிகரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் மலையேறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

 

இவ்வாறு மலையேறுவோருக்காக தற்போதைய நவீன காலத்தில் பல்வேறு வசதிகள் மலை உச்சியில் ஏற்படுத்தப்படுகிறது. நேபாள் தலைநகர் காத்மண்டுவில் இருந்து 140 கி.மீ., தொலைவில் இந்த முகாம் தளம் ஒன்று அமைந்துள்ளது.

8,848 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் 65 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஏறிய எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நார்க்வே ஆகியோர் இந்த வசதிகளை அறிந்தால் நிச்சயம் நம்பமாட்டார்கள்.

ஆம், இப்போது வைஃபை இணைப்பு கிடைக்கிறது. இதனால் மலை ஏறுவோர் தங்களது செல்போன்களை இங்கு தங்கு தடையின்றி பயன்படுத்தலாம். பேக்கரி உணவு வகைகள், சூடான காபி ஆகியவை இந்த முகாம் தளத்தில் கிடைக்கிறது. காய்கறி சாலட், இஸ்டாகிராம், சூரிய வெப்பத்தில் இயங்கும் வெப்பக் காற்று கருவி வசதி ஆகியவை தற்போது எளிதாக கிடைக்கிறது. தரை விரிப்புடன் கூடிய குடில்கள், அலங்கார பிளாஸ்டிக் பூச்செடிகளுக்கு நடுவே காபி குடிக்கலாம்.

ஒரு ஹெலிகாப்டர் மூலம் இந்த பகுதிக்கு தினமும் காய்கறிகள் உள்ளிட்ட உணவு வகைகள் கொண்டு வரப்படுகிறது. விஸ்கி, பிராந்தியும் உண்டு. கிராமத்தை போல் இருந்த இந்த பகுதி இந்த வளர்ச்சி மூலம் அதன் அடையாளத்தை இழந்துவிட்டது. நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைய ஒரு மாதம் ஆகும். ஆனால் தற்போது லூக்லா பகுதியில் அமைக்கப்பட்ட நுழைவு வாயில் மூலம் இது 8 நாட்களாக குறைந்துள்ளது. மலை ஏற்றத்தை பாதியில் முடித்துக் கொள்ள விரும்புபவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தரை இறங்கலாம்.

கடந்த ஆண்டு நேபாளத்தில் இருந்து சிகரம் ஏற 372 வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மலை ஏற்றத்திற்கு அழைத்து செல்லும் கட்டணம் குறைந்து வருவதால் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளிநா டுகளில் உள்ள மலை ஏற்ற பயிற்சி நிறுவனங்கள் 65 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கின்றன. ஆனால் நேபாள பயிற்சியாளர்கள் 20 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலிக்கின்றனர்.

வெளிநாட்டு நிறுவனங்கள் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அதிகமாக வசூலிக்கின்றன. ஆனால் தற்போதைய காலத்தில் சிகரத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கிறது என்று நேபாள மலை ஏற்ற பயிற்சியாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு 6 பேரும், இந்த ஆண்டு இதுவரை 3 பேர் மலை ஏற்றத்தின் போது உயிரிழந்துள்ளனர்.