நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரபல வலைதளமான கூகுள் இணையதளத்தில் ரூ.1.21 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளது பாரதியஜனதா கட்சி, இது இணையதளத்தில் விளம்பரம் அளித்துள்ள அரசியல் கட்சிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 6வது இடமே கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தேர்தல் பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மூலம் செய்யப்படும் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் மக்களை எளிதில் சென்றடைந்து வருவதால், இதுபோன்ற விளம்பரங்களை செய்வதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன.
இந்த நிலையில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்காக, கூகுளில் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும், மதச்சார்பற்ற ஜனதாதளம், தெலுங்கு தேச கட்சி போன்ற பல மாநிலக்கட்சி களும் விளம்பரம் செய்து வருகின்றன. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து உள்ளன.
இந்த விளம்பரங்களுக்கு அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் தற்போது வரை கூகுளில் அதிக விளம்பரம் செய்ததில் பாஜக அரசு முதலிடத்தை பிடித்துள்ளது.
பாஜக கூகுளில் 554 அரசியல் விளம்பரங்கள் வெளியிட்டு உள்ளது. இதற்காக ரூ.1.21 கோடி செலவு செய்துள்ளது.
அடுத்ததாக ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 107 விளம்பரங்கள் வெளி யிட்டுள்ளது. அதற்காக ரூ. 1.04 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ரூ.1.73 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்காக 3 நிறுவனங்கள் அரசியல் விளம்பரங்கள் செய்துள்ளன.
பிரமன்யா ஸ்டிராடெஜி கல்சல்டிங் என்ற நிறுவனம் (Pramanya Strategy Consulting Private Limited ) சார்பில், ரூ. 85,25,300க்கு (ரூ. எண்பத்தைந்து லட்சத்து 25ஆயிரத்துக்கு 300) விளம்பரம் செய்யப் பட்டு உள்ளது. மேலும் டிஜிட்டல் கல்சல்டிங் பிரைவேட் லிமிடெட் (Digital Consulting Pvt Ltd) என்ற நிறுவனம் ரூ.63 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும், மற்றொரு நிறுவனமான டிஜிட்டல் கல்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 63லட்சத்து, 43ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விளம்பரம் செய்துள்ளது.
இந்த பட்டியலில் தேசிய கட்சியான காங்கிரசுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி, 14 விளம்பரம் மட்டுமே செய்து, அதற்காக ரூ.54,100 செலவிட்டுள்ளது.
அத்துடன் எதினோஸ் டிஜிட்டல் மார்க்கெடிங் பிரைவேட் லிமிடெட் ( Ethinos Digital Marketing Private Limited) என்ற நிறுவனம் மூலம் 1லட்சத்து 56, 800 ரூபாய்கு 11 அரசியல் கட்சிகள் சார்பில் விளம்பரம் செய்துள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பம்மி சாய்சரன் ரெட்டி என்பவர் ரூ.26,400 அளவுக்கு விளம்பரம் செய்துள்ளதாகவும் கூகுள் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.