டெல்லி:

நாட்டில் உள்ள 299 மில்லியன் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனத்தை வழங்கவில்லை என்றால் அடுத்த 4 ஆண்டுகளில் பால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருமான அதிகரிப்பு, மக்கள் தொகை பெருக்கம், உணவு முறையில் மாற்றம் போன்ற காரணத்தால் வரும் 2021&22ம் ஆண்டில் பால் மற்றும் பால் சார்ந்த பொருந்த பொருட்களின் தேவை குறைந்தபட்சம் 210 மில்லியன் டன்னாக உயரும். அடுத்த 5 ஆண்டுகளில் 36 சதவீதம் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த தேவையை பூர்த்தி செய்ய ஆண்டிற்கு 5.5 சதவீத உற்பத்தி வளர்ச்சி எட்டப்பட வேண்டும். 2014&15ம் ஆண்டில் 6.2 சதவீதமும், 2015&16ம் ஆண்டில் 6.3 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால் 2020ம் ஆண்டிற்கு ஆயிரத்து 764 மில்லியன் டன் தீவன உற்பத்தியை அடைந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது 900 மில்லியன் டன் தீவனம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. 49 சதவீதம் பற்றாகுறை உள்ளது.

2015ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி முந்தைய 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி 59 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 92 மில்லியன் டன் என்ற அளவில் இருந்து 146 மில்லியன் டன் என்ற நிலையை அடைந்துள்ளது. ஆனால், தீவன பற்றாகுறை காரணமாக சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் 17 சதவீத பங்களிப்பை அளித்து வரும் என்ற நிலையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
எதிர்கால பால் தேவையை பூர்த்தி செய்ய, தற்போது தீவனம் உற்பத்தி செய்யப்படும் நிலத்தின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும். இந்த நிலங்கள் ஆக்ரமிப்பின் பிடியிலும் சிக்கியிருப்பதோடு, வகை மாற்றமும் செய்யப்ப்டடுள்ளது என்று 2016ம் ஆண்டில் நாடாளுமன்ற விவசாயத்துக்கான குழு அறிக்கை அளித்துள்ளது.

தீவன உற்பத்திக்கு முக்கிய காரணியாக இருக்கும் விவசாய நிலங்களில் நமது பாரம்பரிய பயிர்களை பயிரிடுவதை தவிர்த்து மாற்று சாகுபடிக்கு மாறியது தீவன உற்பத்திக்கு பெரிய இழப்பாக உள்ளது. பணம் மற்றும் உணவு பயிருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தீவன உற்பத்தியை அதிகரிக்க இந்தியா தவறினால் உலக சந்தையில் இருந்து அதிக விலைக்கு பால் இறக்குமதி செய்ய வேண்டி வரும். பால் நுகர்வோரை அதிகம் கொண்டுள்ள நாடு இந்தியா என்பதை மனதில் கொள்ள வேண்டும். பால் பண்ணைகளில் தீவன செலவும் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரை ஆகிறது. நாட்டில் 70 சதவீத பால் உற்பத்தி வீட்டு தீவன உற்பத்தியை நம்பியுள்ள சிறு மற்றும் சாதாரண விவசாயிகளிடம் இருந்து வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பால் பண்ணை நடத்தும் சுதிர் மிஸ்ரா என்பவர் கூறுகையில், மாட்டுக்கு தேவையான தீவனத்தை உ.பி. மாநிலம் வாரனாசியில் இருந்து வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

பெரிய பால் பண்ணை நிறுவனங்கள் மட்டுமே வெளிமாநிலங்களில் இருந்து தீவனத்தை பெற முடியும். ஆனால், சிறு விவசாயிகளுக்கு இது எட்டாகனியாகும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து தீவன உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் பலரும் எதிர்பார்க்கின்றனர்.