கொச்சி,
கந்துவட்டி கொடுமை காரணமாக கிட்ணி எடுத்து விற்பனை செய்து வாங்கிய கடனை அடைக்க அழைத்துச்செல்லப்பட்ட நபர் புகார் மனு கொடுத்த 3 மணி நேரத்தில் கலெக்டரின் அதிரடி நடவடிக்கை காரணமாக மீட்கப்பட்டார்.
சிறுநீரகத்தை விற்க கேரளா சென்ற விசைத்தறி தொழிலாளி ரவி எர்ணாகுளம் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டார். ஈரோடு கலெக்டரின் அதிரடி நடவடிக்கை காரணமாக 3 மணி நேரத்திற்குள் ரவியை கேரள போலீசார் மீட்டனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்த இளம்பெண் சம்பூர்ணம் அங்கு கலெக்டர் பிரபாகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், எனது கணவர் ஒரு விசைத்தறி தொழிலாளி. நான் ஒரு துணி நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறேன். எங்களுக்கு விஷால் (11) என்ற ஒரு மகனும், நிவேதா (13) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இருவரும் வேலைக்கு சென்றாலும் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தினறினோம். இதனால் என் கணவர் ரவி சிலரிடம் கடன் வாங்கினார்.
வாங்கிய கடனை கட்டுவதற்காக சிறுநீரகத்தை விற்க ரவி முயற்சி செய்துள்ளார். சிறுநீரகம் விற்க ரவியை இடைத்தரகர் ஒருவர் கேரளா அழைத்துச் சென்றார். கணவர் ரவியை மீட்டுத் தரக்கோரி மனைவி சம்பூர்ணம், ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
இது ஊடகங்களில் பரபரப்பானது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உடடினயாக நடவடிக்கை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்த கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவி உடடினயாக மீட்கப்பட்டார். அவரை ஈரோடு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நேற்றுதான் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி உள்பட 4 பேர் தீக்குளித்தனர். இதில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே மீண்டும் கந்துவட்டி கொடுமை அரங்கேறியிருப்பது பொதுமக்களிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.