டெல்லி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ம்- தேதி தொடங்க உள்ள நிலையில், 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற  குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி விவாதித்தது. அதையடுத்து,  நவம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 17ந்தேதி அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெறும் என்று பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்து உள்ளார்.

நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில், தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேசமயம் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும்,  மின்னணு சிகரெட் தடைச் சட்டம், கார்பரேட் வரி குறைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மிக முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக ஆலோசிப்ப தற்காக அனைத்துக் கட்சிக்கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.