பியாங்க்சங்க், தென் கொரியா
தென் கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கேட்டிங் வீராங்கனையின் சோகக் கதை இதோ….
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அனிஸ் தாஸ் தென் கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2005ல் போட்டிகளில் அவர் பங்கு கொள்ள ஆரம்பித்த போது அவர் வயது வெறும் 19 மட்டுமே. அதன் பிறகு அவருக்கு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியே. எனினும் அவருடைய கனவான ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற அவர் காத்திருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி அவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற தகுதிச் சுற்றில் வென்றதும் ம்கவும் மகிழ்ந்தார். அவருக்கு வேறொரு கனவும் உள்ளது. 32 வயதாகும் அனிஸ் தாஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் மும்பையில் பிறந்தவர். இவரும் இவருடைய இரட்டை சகோதரியும் டச்சு மொழி பேசும் தம்பதியருக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். அப்போது இவருக்கு வயது 8 மாதங்களே.
தற்போது இவர் இந்தியாவில் உள்ள தனது தாயை தேடி வருகிறார். இதுகுறித்து அவர், “எனக்கும் என் சகோதரிக்கும் எங்கள் தாய் பற்றி எதுவும் தெரியாது. எங்கள் தத்து பத்திரங்களின் மூலம் நாங்கள் மும்பையில் ஒரு மருத்துவமனையில் பிறந்துள்ளோம். அதற்கு மூன்று வாரங்கள் கழித்து தத்தெடுக்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளோம். நாங்கள் மிகவும் ஏழையான பெற்றோருக்கு பிறந்திருப்போம் என எனக்கு தோன்றுகிறது.” என தெரிவித்துள்ளார்.