டெல்லி: 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தேசிய கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கட்சி, 10 ஆண்டுகளுக்கு பிறகு, 18வது மக்களவையின் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.
18வது மக்களவைத் தோ்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தேசிய கட்சிகளான பாஜக 240 இடங்களை கைப்பற்றி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி 99 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது. இதனால், பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், 99 இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எதிா்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
மக்களவையில் எதிா்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில், அதாவது சுமாா் 55 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ஆனால், இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளைக்கூட பெற முடியாத நிலையில் இருந்ததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. வே, கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதனால், காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை.
காங்கிரஸ் மட்டுமின்றி வேறு எந்தக் கட்சியும் 10 சதவீத இடங்கள் கிடைக்காததால், கடந்த 10 ஆண்டுகளாக மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில், பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் அக்கட்சிக்கு மக்களவையில் எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனால் பாஜக அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
எதிா்க்கட்சித் தலைவருக்குள்ள சிறப்புரிமைகள்:
பொது கணக்குகள், பல நாடாளுமன்றக் கூட்டுக் குழுக்கள் உள்ளிட்ட முக்கிய குழுக்களின் உறுப்பினராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் இருப்பாா். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தேசிய மனித உரிமைகள் ஆணையம், பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் உள்ளிட்ட சட்டபூா்வ அமைப்புகளுக்குத் தலைவா்களைத் தோ்வு செய்யும் பல்வேறு குழுக்களிலும் எதிா்க்கட்சித் தலைவா் உறுப்பினராக இருப்பாா்.