நியூயார்க்: குறிப்பிட்ட வகையான அல்ட்ராவயலட் கதிர்வீச்சுகளின் மூலம், கோவிட்-19 வைரஸை தாக்கம் வாய்ந்த முறையில் அழிக்க முடியும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்த குறிப்பிட்ட வகை அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு மனித உடலுக்கு எந்தவகை தீங்கையும் செய்வதில்லை. இதை மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் பயன்படுத்தலாம்.
இந்த ஆய்வு, தொற்று கட்டுப்பாட்டிற்கான அமெரிக்க ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், 222 நானோமீட்டர்கள் அலைநீளம் கொண்ட அல்ட்ராவயலட்-சி ஒளிக்கற்றையானது, SARS-CoV-2 வைரஸை, தாக்கம் வாய்ந்த முறையில் கொல்கிறது மற்றும் அக்கற்றை மனித தோலை ஊடுருவுவதில்லை என்பது ஒரு ஆதாரமாக காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய புதிய ஆய்வு, 254 நானோமீட்டர் அல்ட்ராவயலட்-சி ஒளிக்கற்றையை விடவும், 222 நானோமீட்டர் அல்ட்ராவயலட்-சி ஒளிக்கற்றை ஆபத்து குறைந்தது மற்றும் அதன் ஊடுருவும் திறன் வரம்பிற்கு உட்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.