சென்னை: உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? என செய்தியாளரின் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதனால், அவருக்கு இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சர்களும், தங்களது சக்திக்கு மீறி, வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை மிகவும் தாமதமாகக் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவரை முதலிலேயே அமைச்சராக்கியிருக்க வேண்டும்.
கடந்த தேர்தலிலேயே தெரியும், உதயநிதி திறமை பெற்ற இளைஞர். அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். சட்டப்பேரவை உறுப்பினராக அவர் சில காலம் பயிற்சி பெறட்டும் என்றே முதல்வர் காத்திருந்தார் என்று தோன்றுகிறது. அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் என்று இங்கு யாரும் சொல்லவில்லை. அவருக்கு தாமதாக கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் பலரும் சொல்கின்றனர். அவருக்கு எந்தத் துறை கொடுப்பது என்பது குறித்து முதல்வர் நாளை அறிவிப்பார் என்றார்.
வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு பதில் கூறியவர், வாரிசு அரசியலே இருக்கக்கூடாது என்று ஏதேனும் இருக்கிறதா? என எதிர்கேள்வி எழுப்பியவர், வாரிசு அரசியல் வழக்கமானதுதான். மக்களுக்கு இதெல்லாம் தெரியும். அரசியலில் 10% பேர் வாரிசுகள்தான். வாரிசு அரசியல், அனைத்து இடத்திலும் அனைத்துக் கட்சியிலும் இருப்பதுதான். அது ஒன்றும் தவறில்லை என்றார்.
மறைந்த கலைஞர் முதல்வராக இருந்தபோது, மு.க.ஸ்டாலின் துணைமுதல்வராக நியமிக்கப்பட்டார். அதுபோல உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவாரா என செய்தியாளர்கள் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அமைச்சர், அவர் துணை முதல்வர் ஆவாரா என்று உங்களைப் போல் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.