புதுடெல்லி: உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க், மெய்நிகர் நாணயமான பிட்காயின் மீது அதிகளவில் முதலீடு செய்துள்ளார் என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்க், ‘டெஸ்லா’ என்ற பெயரில், மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நிறுவனம், பிட் காயின் மீது 10 ஆயிரத்து 950 கோடியை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பிட் காயின் மதிப்பு இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பணம் கொடுப்பதற்கு பதிலாக, பிட்காய்ன் செலுத்தி, டெஸ்லா காரை வாங்கும் வசதியும் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அண்மையில், எலான் மஸ்க், பிட்காய்ன் முத்திரையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், ‘டாகிகாய்ன்’ எனும் வேறொரு மெய்நிகர் நாணயம் குறித்த மீம்ஸையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவர் பிட்காய்ன் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
நிறுவனத்தின் பணப்புழக்கத்தை எளிதாக்கிக் கொள்ளவும், வருவாயை மேலும் பெருக்கிக் கொள்ளவும், தங்களது முதலீட்டுக் கொள்கையை மேம்படுத்தி அமைத்திருப்பதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.