மும்பை: இந்தாண்டு அக்டோபர் மாதம் மராட்டிய மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், அதற்கான முஸ்தீபுகளில் தீவிரமாக இறங்கியுள்ள பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள், தேர்தலை தனித்து சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலின்போதே, சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட சமமான இடங்களில் போட்டியிட வேண்டுமென்ற உடன்பாடு ஏற்பட்டதாய் கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த உடன்பாட்டிற்கு பாரதீய ஜனதா தரப்பில் சம்மதம் இல்லையென்று தகவல்கள் வருகின்றன.

பாரதீய ஜனதா கடந்த தேர்தலில் தனித்து நின்று 122 இடங்களைப் பெற்றது. இந்தமுறை தனித்து நின்றால் 160 இடங்கள் வரை பெற்று தனிப்பெரும்பான்மை பெறலாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பல எண்ணுகிறார்களாம். ஆனால், சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சிக்கு 130 முதல் 135 வரையான இடங்களே கிடைக்குமாம்.

ஆனால், கடந்தமுறை 63 இடங்களை மட்டுமே பெற்ற சிவசேனா, இந்தக் கூட்டணியால் தனது எண்ணிக்கையை 90 முதல் 100 வரை உயர்த்திக் கொள்ளும் என்று பாரதீய ஜனதாவினர் கருதுகின்றனராம். அதேசமயம், கூட்டணியை முறிக்க முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பலர் விரும்பவில்லை என்றே உறுதியான தகவல்கள் வெளியாகின்றன.

மராட்டிய மாநில காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல பிரமுகர்கள் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துவரும் நிலையில், தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை, பா.ஜ. மற்றும் சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளுமே எடுக்க விரும்பவில்லை என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தனித்துப் போட்டி என்று வெளிவரும் தகவல்களை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் மறுத்துள்ளார்.

[youtube-feed feed=1]