சென்னை:
மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்பெறுமா என்பது குறித்து 23ந்தெதிக்கு பிறகு தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறி உள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் பாஜக வெற்றி பெறும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளதால், பாஜக தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுக்கு இன்று இரவு விருந்து கொடுக்கிறார்.
அமித்ஷாவின் ஆலோசனை கூட்டம் மற்றும் விருந்தில் கலந்துகொள்ள தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட பாமக அன்புமணி, தேமுதிக சுதீஷ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் டில்லி செல்கிறார்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் தங்கமணி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் ஒரே விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
இதனிடையே, பாஜக தலைவர் அமித்ஷா அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்பதற்காக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.. தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்தும், சுதீஷும் இன்று பிற்பகலில் டெல்லி செல்ல உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால், அதிமுக இடம்பெறுமா என்ற கேள்விக்கு, அது தொடர்பாக வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப் படும் என்றும் தெரிவித்தார்.